மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் காலை இந்திய அணியின் பந்து வீச்சு ஒன்றுமேயில்லாமல் சொத்தையாக இருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 139 ரன்களை விளாசி தன் 34-வது சதத்தை எடுத்து சுனில் கவாஸ்கர், பிரையன் லாராவை சமன் செய்ததோடு ஜோ ரூட்டையும் கடந்தார். ஆனால், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி படுமோசமாக அமைந்தது. 311/6 என்று இன்று காலை தொடங்கி குறைந்தது 400-க்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால், பிடியை நழுவ விட்டது ரோஹித் சர்மாவின் மந்தமான கேப்டன்சி.
ஆஸ்திரேலியா 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ரோஹித் சர்மா தேவையில்லாமல் தொடக்கத்தில் இறங்கி அசிங்கமாக ஆட்டமிழந்து சென்றார். அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே தன் வழியே செல்லும் கமின்ஸ் பந்து அது. ஒன்று அதை பின்னால் சென்று நேர் பேட்டில் தடுத்தாடியிருக்க வேண்டும், இல்லையேல் ஆடாமல் விட்டிருக்க வேண்டும், அப்படியே புல் ஷாட் ஆடினாலும் பின்னால் நன்றாகச் சென்று மிட்விக்கெட் மேல் அடிக்க வேண்டும், இதை எதுவும் செய்யாமல் அரை புல் ஷாட் ஆடி கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து விட்டுச் சென்றார். இத்தகைய போக்கு அவர் மீது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.