சென்னை: பணிபுரியும் பெண்களுக்கு உதவிடும் வகையில் தோழி விடுதி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. சென்னை, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பெண்களுக்கு வேலை கிடைப்பதை விட பாதுகாப்பான தங்கும் விடுதிகள் கிடைப்பது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள சென்னையில் உள்ள தோழி தங்கும் விடுதில் கூடுதலாக 1000 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசின் திட்டப்படி சேப்பாக்கம், தரமணி, பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் இந்த விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தோழி விடுதியில் கூடுதலாக 500 படுக்கைகள், தரமணியில் உள்ள தோழி விடுதியில் 450 படுக்கைகள் மற்றும் பரங்கிமலையில் உள்ள தோழி விடுதியில் 120 படுக்கைகள் என கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. வரும் காலங்களில் கோவை, மதுரை உள்பட 25 தோழி விடுதிகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட உள்ளது. தற்போது சென்னை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, அடையாறு என மாநிலம் முழுவதும் 13 விடுதிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
The post பணிபுரியும் பெண்களுக்காக சென்னையில் உள்ள தோழி விடுதியில் கூடுதலாக 1000 படுக்கைகள் சேர்ப்பு appeared first on Dinakaran.