மதுராந்தகம்: பணியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த பெண் கிராம உதவியாளர் உயிரிழந்தார். இதற்கு அதிகாரிகள்தான் காரணம் என்று அவரது மகள் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கீதா (45). இவர் அச்சிறுப்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றினார். இங்கு கிராம நிர்வாக அலுவலராக முத்துமாரி என்பவர் பணியாற்றி வருகின்றார். கிராம நிர்வாக அலுவலரை சந்திக்கவரும் ஆண்கள் மதுபோதையில் வருவதால் தனது பணியை சரிவரமேற்கொள்ள முடியவில்ைல என்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரியை சந்திக்க வருகின்றவர்கள் மதுபோதையில் வந்து கீதாவிடம் தகராறு செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரிடம் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் பணம் பெற்று தனக்கு வழங்க வேண்டும் என்று கீதாவிடம் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து கீதா, மதுராந்தகம் வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் அச்சிறுப்பாக்கம் பகுதியில் தமிழக அரசு உத்தரவின்படி, ஆட்சேபணையில்லா வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க கடந்த 17ம்தேதி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கீதா சற்று தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கோட்டாட்சியர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்ததால் கீதா மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து கீதா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு அச்சிறுப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று மாலை கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறும்போது, ‘’இறந்தவரின் மகள் லாவண்யா கொடுத்த புகாரின்படி, வழக்குபதிவு செய்துள்ளோம். சம்பவம் குறித்த விசாரணையின்போது உரிய காரணங்கள் தெரியவரும்’ என்றார்.
இதுகுறித்து அவரது மகள் லாவண்யா கூறுகையில், ‘’கடந்த 8 மாதமாக எனது தாய்க்கு விஏஓ, ஆர்ஐ, ஆர்டிஓ ஆகியோர் தொந்தரவு கொடுத்தனர். இதன்காரணமாக மன உளைச்சல் அடைந்து நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தார். எனவே, இதற்கு அதிகாரிகள்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கண்ணீர் விட்டார்.
The post பணியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து சிகிச்சை பெற்ற பெண் கிராம உதவியாளர் சாவு: அதிகாரிகள் மீது மகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.