சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. தமிழகத்தில் அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் பண்ணாரி அம்மன் கோயில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் எந்த கோயிலிலும் இல்லாத வகையில் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவர்.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குண்டம் திருவிழா இன்று இரவு கோயில் வளாகத்தில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா ஏப்ரல் 6, 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
The post பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: இன்று பூச்சாட்டுதலுடன் துவக்கம் appeared first on Dinakaran.