ஊட்டி: தனியார் விதை விற்பனை நிலையங்களில் ரூ.58 லட்சம் மதிப்பில் பதிவு சான்று இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 28 விதை குவியல்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில் விதை ஆய்வாளர்களுடன் சிறப்பு குழு அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மலை காய்கறிகளின் விதை குவியல்களுக்கு முளைப்பு திறன் சான்று, பதிவு சான்று, கொள்முதல் பட்டியல், கொள்கலன்கள் விவரம், விற்பனை ரசீது மற்றும் இருப்பு பதிவேடு ஆகியவை தொடர்பாக சரிபார்க்கப்பட்டது.
இதில், பதிவுச் சான்று இல்லாத 28 விதை குவியல்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இது மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும். மேலும், விதை சேமிப்பு அறைகள் ஆய்வு செய்யப்பட்டது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விதை குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ரேவதி, ஈரோடு மாவட்ட விதை ஆய்வாளர்கள் சுமையா, சாந்தி, அருணா ஜோதி, நவீன், கோவை மாவட்ட விதை ஆய்வாளர்கள் ஆனந்தன், நாக சுப்பிரமணியம் மற்றும் பரமேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பதிவு சான்று இல்லாத ரூ.58 லட்சம் விதை குவியல் விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.