சென்னை: 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் லதா அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக பள்ளிக்கல்வியில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் 28ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பிப்ரவரி 17ம் தேதி முதல் தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் மார்ச் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை தொகுத்து முழு விவரங்களை மார்ச் 15ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், தேர்வுக்கு வருகை புரியாதவர்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். இதுதவிர செய்முறைத் தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைதான் நியமிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.