தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையான பதிவுத்துறை, ஞாயிற்றுக்கிழமையன்று செயல்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, அறிவித்தபடி செயல்படாததால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நிலம், வீடு வாங்குதல், விற்றல் போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், பதிவுத்துறை அலுவலகம் தமிழகத்தில் எப்போதும் பரபரப்பான அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த துறை 2022-23-ம் ஆண்டில் ரூ.17,296 கோடியும், 2023-24-ம் ஆண்டில் ரூ.18,825 கோடியும் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி ரூ.14,525 கோடியை எட்டிவிட்டது.
மார்ச் மாதத்துக்குள் கடந்த ஆண்டு வருவாயை முறியடித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த் துறையின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் மக்கள் பத்திரங்களை பதிவு செய்ய அலைமோதுகின்றனர். சில நேரங்களில் முகூர்த்த நாட்கள் வார விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இதை தடுக்க சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் பத்திரங்களை பதிவு செய்யலாம் என்ற நடைமுறையை அரசு உருவாக்கியுள்ளது.