முகமது சிராஜ் தன் பந்து வீச்சில் புதிய மெருகேற்றியுள்ளார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களிலிருந்தே இதைப் பார்த்து வருகிறோம். நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் அதே போல் தன் ‘வாபுள் சீம்’ என்ற பந்தின் தையலை வித்தியாசமாகப் பிடித்து காற்றில் பந்து தள்ளாடிக் கொண்டே வருமாறு வீசி மே.இ.தீவுகளின் வீரர்களை சந்தேகத்திலேயே வைத்திருந்தார்.
வழக்கமாக பந்தின் தையலை நேராகப் பிடித்து கடைசி நேர மணிக்கட்டு விசையில் பந்தை எழுப்புவதும், திசை மாற்றுவதும் வழக்கம். ஆனால் சிராஜ் ஒன்று பந்தின் தையலைக் குறுக்காகப் பிடிக்கிறார் இல்லையெனில் ஒரு கோணத்தில் பிடித்து ஒரு கோணத்தில் பந்தை அந்த வேகத்தில் செலுத்தும் போது பந்து ஆடிக்கொண்டே வரும். இதனால் பேட்டர்கள் பந்து எப்படி ஸ்விங் ஆகும் என்பதைக் கணிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஓவல் டெஸ்ட் போட்டியில் அந்த ஃபேமஸ் கடைசி விக்கெட் பந்து இப்படித்தான் காற்றில் ஆடியபடியே வந்ததால் அட்கின்சனுக்குப் புரியவில்லை ஸ்டம்ப் பதம் பார்க்கப்பட்டது இந்திய அணி வெற்றியுடன் தொடரை 2-2 என்று சமன் செய்தது.