ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் நவீன கால டி20 கிரிக்கெட்டில் காண கிடைக்காத முழுமையாக பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய போட்டியாக இருந்தது சற்று வியக்கவைத்தது.
ஏனெனில் ஐபிஎல் தொடர் வணிக ரீதியிலானது. இங்கு 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்படும் ஆட்டங்களையும், 10 பந்துகளில் 30 ரன்களை விளாசும் பேட்ஸ்மேன்களையுமே காண்பதற்காக ரசிகர் கூட்டம் குவிகிறது. போட்டி அமைப்பாளர்களும், ஒளிபரப்பாளர்களும், ரசிகர்களும் ரன் வேட்டையை காணவே விரும்புகின்றனர். அப்படி இருக்கும்போது பஞ்சாப், கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கூட்டாக 20 விக்கெட்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. அதிலும் 30.4 ஓவர்களில் ஆட்டமே முடிந்துவிட்டது.