சென்னை: “மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில்பாதை திட்டம், ரயில் பாதை மின் மயமாக்கல் போன்ற தமிழகத்தின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறு வாழ்வு, புனரமைப்பு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிதி நிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை மாத வருவாய் பிரிவினர் மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பை ரூபாய் 12 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஆனால், நிச்சயமற்ற வருமான பிரிவில் உள்ள சுமார் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தி சரிந்து வருவதை தடுத்து, மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.