நியூயார்க்: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ‘பசிபிக் கடலின் நெருப்பு வளையம்’ எனப்படும் பப்புவா நியூ கினியா தீவானது தீவிர நில அதிர்வு மண்டலத்தில் அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த மண்டலம் தென்கிழக்கு ஆசியா வழியாக பசிபிக் படுகை வரை நீண்டுள்ளது. குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக இருப்பதால், இவை பெரிய சேதத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், பேரழிவை தரக்கூடிய நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் தீவு அருகே இன்று காலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஒன்று முதல் மூன்று மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. அண்டை நாடான சாலமன் தீவுகளின் சில பகுதிகளில் 0.3 மீட்டருக்கும் குறைவான சிறிய அலைகளும் எழுந்தது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 6.04 மணிக்கு ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின் கிம்பே என்ற பெரிய நகரத்திலிருந்து, தென்கிழக்கே சுமார் 194 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதே இடத்தில் 5.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
The post பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கடல் அலை சுனாமி போல் எழுந்தது appeared first on Dinakaran.