புதுடெல்லி: ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் சாமானிய மக்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்டணம் தொடங்கி ரயில் பயணங்களில் பயணிகளுக்கு கிடைக்கும் வசதிகள் ஏராளம். அதனால் அனைத்து தரப்பு மக்களும் நீண்ட தூர மற்றும் குறுகிய கால பயணங்களுக்கு ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விமான பயணங்களில் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடத்தில் வசூலிக்கப்படும் கட்டண நடைமுறையை ரயில் பயணங்களிலும் கொண்டு வந்துள்ளது ஐஆர்சிடிசி.
விமான பயணத்தை போலவே ரயில் பயணிகள் இலவசமாக எவ்வளவு எடை கொண்ட லக்கேஜை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த கட்டண நடைமுறை தேஜஸ் போன்ற தனியார் ரயில்களுக்கு இருந்து வந்த நிலையில் இனி அனைத்து ரயில்களுக்கும் இது கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
> ஏசி முதல் வகுப்பு – 70 கிலோ கிராம்
> ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு – 50 கிலோ கிராம்
> ஏசி 3 – டயர் ஸ்லீப்பர் / ஏசி சேர் கார் – 40 கிலோ கிராம்
> ஸ்லீப்பர் கிளாஸ் – 40 கிலோ கிராம்
> இரண்டாம் வகுப்பு – 35 கிலோ கிராம்
இது தவிர லக்கேஜுக்கான கட்டணம் செலுத்தி ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக ஏசி முதல் வகுப்பு – 150 கிலோ கிராம், ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு – 100 கிலோ கிராம், ஸ்லீப்பர் கிளாஸ் – 80 கிலோ கிராம், இரண்டாம் வகுப்பு – 70 கிலோ கிராம் வரை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக கொண்டு செல்லும் லக்கேஜுக்கான எடையும் இந்த அதிகபட்ச எடையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூடுதல் லக்கேஜுக்கான புக்கிங்கை ரயில் புறப்பாட்டுக்கு 30 நிமிடங்கள் முன்னர் வரையில் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போதும் பயணிகள் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“லக்கேஜ் அதிகமாக இருந்தால் பயணத்தின் சுகம் பாதியாக குறையும்! அதிக லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டாம். கூடுதல் லக்கேஜ் இருந்தால் அதனை லக்கேஜ் கவுன்டரில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்” என ரயில்வே அமைச்சகம் இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளது. கடந்த மே 29-ஆம் தேதி இந்த ட்வீட் பகிரப்பட்டுள்ளது.
கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால் அபராதம் எவ்வளவு?
அனுமதிக்கப்பட்டு எடைக்கு மேல் பயணிகள் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்வது உறுதியானால் கூடுதல் எடைக்கான அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இது அந்த எடைக்கான கட்டணத்தை காட்டிலும் ஆறு மடங்கு கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 40 கிலோ எடை கொண்ட கூடுதல் லக்கேஜை பயணி ஒருவர் 500 கிலோமீட்டர் தூர பயணத்தில் லக்கேஜ் வேன் மூலம் கொண்டு செல்கிறார் என்றால் அதற்கான கட்டணம் 109 ரூபாய். ஆனால், அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் பயணி அதை கொண்டு செல்வது உறுதியானால் அதற்கு அபராதமாக 654 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிகிறது.
அதேபோல லக்கேஜ் பைகளுக்கு அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் லக்கேஜ் மற்றும் அதன் எடை விஷயத்தில் கவனமாக இருக்கவும்.