காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, விஜய் வருகையை ஒட்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்தும் அக்கட்சியினர் கள ஆய்வில் இறங்கியுள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பொதுமக்களின் விளை நிலங்கள், நீர் நிலைகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்படுவதால் அந்தப் பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் 908 நாட்களாக நீடித்து வருகிறது. அந்த 13 கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு அந்த கிராமங்கள் போலீஸ் கட்டுக்குள் வந்தன.