மேட்டுப்பாளையம்: பரபரப்பான ஊட்டி சாலையில் ஜாலியாக வாக் செய்த பாகுபலி யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகலில் வனப்பகுதிக்குள்ளும், இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சாலையை கடக்க முயன்றது. வாகனங்கள் அதிகளவில் வரவே திடீரென வாகனங்களை வழிமறித்து நின்றது. தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை நோக்கி பாகுபலி யானை வரவே மிரண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதியாக நின்றனர். சிறிது நேரத்தில் பாகுபலி யானை தானாகவே நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்றது.
எப்போதும் பரபரப்பான ஊட்டி சாலையில் திடீரென பாகுபலி யானை உலா வருவதை கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் பாகுபலி யானை சாலையை கடந்து மீண்டும் நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்றது. பரபரப்பான ஊட்டி சாலையில் திடீரென பாகுபலி யானையை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
The post பரபரப்பான ஊட்டி சாலையில் ஜாலி வாக் செய்த ‘பாகுபலி’ யானை: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.