புதுடெல்லி: வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில், வைஷ்ணவி தேவி கோயில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 34 ஆகும்.
டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை: டெல்லியில் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெய்த மழையின் அளவு மிகவும் அதிகமாகும், இது இயல்பை விட 60% அதிகம். கனமழையால் டெல்லி வழியாகப் பாயும் யமுனை நதியின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 204.61 மீட்டரை எட்டியது, தொடர்ந்து இரண்டாவது நாளாக யமுனை நதியின் நீர்மட்டம் 204.50 மீட்டரை தாண்டியுள்ளது.