ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலாடி அருகே மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம். கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி, ராமநாதபுரம் அருகே சக்கரைகோட்டை பெரிய கண்மாய் மற்றும் தேர்த்தங்கல் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு தோறும் பருவ மழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாட்டுகளில் இருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வருவது வழக்கம்.
இதில் தாழைக் கொத்தி, செங்கல் நாரை, நத்தை கொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கான், வில்லோ வால்பவர், ஆஸ்திரேலியா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட 40 வகைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வரும். இதுபோன்று மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு, தொண்டி காரங்காடு அலையாத்தி காடு, வாலிநோக்கம் கடல் தரவை மற்றும் கடல்தீவு பகுதிகளில் நண்டு திண்ணி உல்லான், முடிச்சு உல்லான், கல்திருப்பி போன்ற அரியவகை பறவை இனங்கள் நிரந்தரமாக உள்ளது.
இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள், கடல், கடல் உயிரினங்கள் இருப்பதால் பல மைல் தூரம் கடல் கடந்து பறந்து வந்து இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டு கருவேல மரங்கள் மற்றும் தீவு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, கோடை கால துவக்கத்தில் குஞ்சுகளுடன் பறந்து செல்லுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு நவம்பர் மாதம் பருவமழை பெய்ய துவங்கியது. பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீரின்றி காணப்பட்டது. தொடர்ந்து பெய்த மழை மற்றும் வைகையில் இருந்து வந்த தண்ணீரால் டிசம்பர் மாதத்தில் கண்மாய் உள்வாய் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அக்டோபர் மாதத்தில் வரக்கூடிய பல்வேறு இனங்களை சேர்ந்த வெளிநாடு பறவைகள் வரத்து குறைந்து, ஒரு சில இனபறவைகள் மற்றும் வாழ்விட பறவைகள் மட்டும் தற்போது தங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் மேலச்செல்வனூர் ராஜசேகர் கூறும்போது, ஆண்டுதோறும் விருந்தாளிகள் போல் வந்து ஆரவாரத்துடன், வட்டமிட்டு இங்கும், அங்கும் பறந்து மெல்லிசை, இனிய ரீங்காரத்துடன் இருக்கும் பறவைகளை உள்ளூர் மக்கள், சுற்றுவட்டார கிராமமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்தாண்டு குறைந்த எண்ணிக்கையில் பறவைகள் இருப்பதால் வெளியூர், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றார்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மாவட்டத்தில் 2020 கணக்கின்படி சரணாலயம், கடல் தீவு பகுதிகளுக்கு சுமார் 40 வகைக்கும் மேலான பறவை இனங்களை சேர்ந்த சுமார் 75ஆயிரம் வரையிலான பறவைகள் வந்தது. கடந்த 2021,2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பறவைகள் வரத்து குறைந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் கீழான எண்ணிக்கையில் பறவைகள் வந்தது. இதுபோன்று நடப்பாண்டு காலம் தவறி பெய்த பருவமழையால் பெரும்பாலான பறவை இனங்கள் வரத்து இல்லை.
தற்போது வாழ்விடங்கள்(உள்ளூர்) மற்றும் ஒரு சில புலம்பெயர் நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சொந்த வாழ்விட பறவைகளான உள்ளூர் இன பறவைகள், குறிப்பாக தாழைக் கொத்தி, செங்கல் நாரை, நத்தை கொத்தி, கரண்டிவாய் மூக்கான், ஆஸ்திரேலியா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா மற்றும் சைபீரிய மற்றும் மங்கோலியாவை சேர்ந்த வெள்ளைதலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதி நாரைகள், ஆர்க்டிக் பகுதி பறவைகள் உள்ளிட்ட ஒற்றை இலக்க பறவை இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டது.
தற்போது கண்மாய்களில் தண்ணீர் கிடக்கிறது. போதிய இறையும் கிடைத்து உரிய தட்பவெப்ப கால சூழ்நிலை நிலவுவதால் இருக்கக்கூடிய பெரும்பாலான பறவை இனங்கள் முட்டையிட்டு,அடைக்காத்தும், சில இனங்கள் குஞ்சுகள் பொறித்தும் உள்ளது. மார்ச் மாதத்திற்குள் குஞ்சுகள் நன்றாக பறக்கும் நிலையை அடைந்ததும் புலம்பெயர் நீர்பறவைகள் சென்று விடும். வாழ்விட பறவைகள் குஞ்சுகளுடன் நிரந்தரமாக தங்கிவிடும். அடுத்த மாதம் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களை வைத்து பறவைகளின் எண்ணிக்கை கண்டறியப்படும். அதன்பிறகு இந்தாண்டு எந்தந்த இனப்பறவைகள், எத்தனை என முழு விபரம் தெரிய வரும் என்றார்.
The post பருவம் தவறி பெய்த மழையால் சரணாலயங்களுக்கு பறவைகள் வரத்து 10 மடங்கு சரிவு appeared first on Dinakaran.