சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்காக கடந்த 1ம் தேதி காலை கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 4ம் திருவிழாவான 4ம் தேதி காலை 8 மணிக்கு மரப்பாணி பூஜை மற்றும் உற்சவ பலி நடைபெற்றது. 5ம் திருவிழாவில் மாலை 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7ம்திருவிழா அன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், 8ம் திருவிழாவான நேற்று இரவு 7 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9.50 மணிக்கு நடைபெற்றது. முதல் தேரில் விநாயகரும், 2வது தேரில் பெருமாளும், அம்பாளும் அமரச்செய்து தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், கோயில் மேலாளர் அரி பத்மநாபன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். ரத வீதியில் தேர் வந்தபோது வானில் கருடன் வட்டமிட்டது. இதனைக்கண்ட பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினர். பத்தாம் திருவிழாவான நாளை மாலை 3 மணிக்கு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் ஆராட்டுத்துறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில்களின் இணை ஆணையர் பழனி குமார், கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீ காரியம் பத்மநாபன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மதுசூதனப் பெருமாள் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.
The post பறக்கை மதுசூதன பெருமாள் கோயிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.