பெங்களூரு: மதசார்பாற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், அவர் பெண்ணை அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, அதை வீடியோ எடுத்து மிரட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வலின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் கொடுத்த புகார் தொடர்பான வழக்கில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பணிப்பெண், பிரஜ்வல் ரேவண்ணா குடும்பத்துக்குச் சொந்தமான ஹேலேநரசிபுராவில் உள்ள பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், முதல் தாக்குதல் கடந்த 2021-ம் ஆண்டு நடந்தது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அவரின் குற்றசாட்டின்படி, கரோனா ஊரடங்கின்போது, ஹேலேநரசிபுராவில் பண்ணை வீடு, பெங்களூருவில் உள்ள வீடு என பல இடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாக கூறியிருந்தார்