சென்னை: பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் தொடக்கப் பள்ளிக்கூடங்களைக் போல நினைத்துக் கொண்டு, அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு முயல்வது நல்லதல்ல. மாநில அரசு மற்றும் பல்கலைக் கழகங்களின் தன்னாட்சியை மதித்து இந்த வரைவு விதிகளை மானியக்குழு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை முற்றிலுமாகப் பறிக்க பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டிருக்கிறது. துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் நியமனத்தில் தாங்கள் உருவாக்கவிருக்கும் விதிகளை பின்பற்ற மறுக்கும் பல்கலைக் கழகங்களின் பட்டம் வழங்கும் உரிமையும், அங்கீகாரமும் பறிக்கப்படும் என்று மானியக்குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.