தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏற்கெனவே இடியாப்பச் சிக்கலில் இருக்கும் பல்கலைக்கழக விவகாரத்துக்கு இந்த உத்தரவு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக திமுக மூத்த வழக்கறிஞரும் எம்பி-யுமான வில்சன் அறிவித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிதாக தொடரப் போகும் வழக்கும் அந்த பட்டியலில் இடம்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.