புதுடெல்லி: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் பி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனத்தால் பல்லடம் படுகொலை சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, அச்சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக போலீஸாரின் 14 தனிப்படைகளும் திணறும் சூழல் உள்ளது. சுமார் 14 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் கொள்ளையுடன் நடந்த கொலைச் சம்பவங்களின் குற்றவாளிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த குற்றவாளிகளில் பாவரியா எனும் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த வட இந்தியர்களும் உள்ளனர்.