சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பேசியதாவது: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய தொகுதி. இங்குள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே, இந்த சாலைகளை 4 வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவையில் தெரிவித்து, அதற்கு அமைச்சர் அனுமதியும் வழங்கியுள்ளார்.
அந்த இடத்தில் 14 வீடுகளுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 200 வீடுகளுக்கு தான் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அந்த தொகையை வழங்கி விட்டால் இந்த ஆண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி சொன்னது உண்மை தான். பல்லாவரம் பகுதியில் இருந்து குன்றத்தூர் சாலையை இணைத்து விட்டோம் என்றால் தாம்பரம் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறைந்து விடும்.
அரசின் சார்பாக அதற்கு வேண்டிய முயற்சிகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் என்ன பிரச்சனை என்றால் பல்லாவரம் என்பது வியாபாரிகள், வர்த்தகர்கள் அதிகமாக இருக்கின்ற பகுதி என்ற காரணத்தினால் அந்த சாலையில் கட்டுமானம் என்பது அதிக அளவில் இருக்கிறது. அதன் விலைகள் என்று பார்க்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது.
அதனால் தான் கொஞ்சம் காலதாமதம் ஆனது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் பல்லாவரம் திட்டம் குறித்து அதிகம் அறிந்தவர். எனவே மீண்டும் அவரிடம் வலியுறுத்தி நிதித்துறையில் தேவையான அளவிற்கு பணத்தை ஒதுக்கி அந்த நிலம் எடுப்பு பணிகள் முடிந்துவிட்டோம் என்று சொன்னால் அந்த சாலை போடப்படும்” என்றார்.
The post பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் சாலைகளை 4 வழிப்பாதையாக மாற்றும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: சட்டசபையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.