ஊட்டி : கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கடந்த மாதம் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்ததால், தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் குறித்த நேரத்தில் மலர்கள் பூத்து காணப்படுகிறது. பெரும்பாலான தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள டேலியா, மேரிகோல்டு கேலண்டுள்ளா, பேன்சி, சால்வியா, போன்ற மலர்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பல வண்ணங்களில் டேலியா மலர்கள் பூத்து காணப்படுகிறது.
இவைகள் மழையிலும் வெயிலிலும் பாதிக்காமல் இருக்க தற்போது மாடங்களில் படிக்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் மலர்கள் ஒடிந்து விழாமல் இருக்க மலர் செடிகளில் குச்சிகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் பல வண்ணங்களில் பூத்துள்ள இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது இந்த மலர்கள் தொலைவிலிருந்து பார்த்தாலும் அழகாக காட்சியளிக்கும் நிலையில் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இம்முறை வரும் 15ம் தேதி மலர் கண்காட்சி துவங்கும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தாவரவியல் பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஓரிரு நாட்களில் மலர் தொட்டிகள் அனைத்தும் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதற்காக தற்போது பூங்காவில் உள்ள தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே தொட்டிகளில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர். குறிப்பாக, பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் டேலியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
The post பல வண்ணங்களில் பூத்துள்ள டேலியா மலர்களை பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.