சென்னை: பள்ளப்பட்டி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளின் பெயர்களை மாற்றக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் 1935 முதல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அமைவதற்கு பலர் மிகப் பெரிய அளவில் பொருளாதாரப் உதவி செய்துள்ளார்கள். நிதி வழங்கியவர்களின் பெயரிலேயே வார்டுகளுக்கு பெயர் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
ஹாஜி வாப்பு பெரு முயற்சியால் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாகப் பள்ளப்பட்டி மருத்துவமனை மாறியது. அதன் காரணமாக ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியீட்டு இன்று வரை இயங்கி வந்தது.தற்போது பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்திற்கு ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை என்ற பெயர் நீக்கப்பட்டு இருப்பது அவரின் தியாகத்தை மறைக்கும் செயலாகும்.இதேபோல தேனி மாவட்டம் உத்தமபாளையம் மருத்துவமனை அமைய ஹாஜி கருத்தராவுத்தர் பெரும் முயற்சி மேற்கொண்டார்கள்.
ஹாஜி கருத்த ராவுத்தர் மறைந்த தனது மூத்த சகோதரர் நத்தர் ஹூசைன் மீரா ராவுத்தர் நினைவாக ஒரு லட்சம் ரூபாய்நிதி வழங்கினார். இதன் வழியாக மருத்துவமனையின் முக்கிய கட்டிடம் கட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உருவாக வாரி வழங்கிய கொடை வள்ளல் ஹாஜி கருத்த ராவுத்தர் பெயரால் இயங்கி வந்த அரசு மருத்துவமனையில் அவரது பெயர் தற்போது நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் துயரமானது.சமுதாயத்திற்கு உதவும் நோக்கில் அளப்பரிய பொருளாதார உதவிகள் வழங்கிய இம்மாமனிதர்களின் பெயர்கள் மீண்டும் அந்த அரசு மருத்துவமனைகளுக்குச் சூட்டப்படவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post பள்ளப்பட்டி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளின் பெயர்களை மாற்றக் கூடாது: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.