சென்னை: பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியுள்ளனர்.
அதில் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறித்த டி-சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு, 2 மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்து நடனம் ஆடியதாகவும் புகார் மனு இயக்குநரகத்துக்கு வந்துள்ளது. ஆண்டுவிழாவின் போது திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும்.
The post பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெற கூடாது: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.