மதுரை: மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், செலவினம் ரூ.1,480.13 கோடியாகவும் மதிப்பிடப்பட்டு ரூ.40 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் பற்றி விவாதிக்க அனுமதி கோரி மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் கூச்சல் போட்டனர். அவர்களுக்கு எதிராக திமுக கவுன்சிகளும் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியதும், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில், அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அவர்கள் நலனை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றனர்.