*ஆமை வேகத்தில் நகரும் அம்ரூத் திட்ட பணிகள்
பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் ஒன்றிய அரசின் திட்டமான அம்ரூத் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால், நகராட்சி பகுதியில் சாலைகள் தோண்டப்பட்டு, பொதுமக்களுக்கும் வாகன போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைவான பணியாட்களை கொண்டு செய்யப்படுவதால், திட்டமிடப்பட்ட காலத்தை தாண்டியும், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.
காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்தப்படுத்தி, நகர மக்களுக்கு வழங்கும் பணியினை, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக ஆவத்திபாளையம், அக்ரஹாரம் ஆகிய இடங்களில் உள்ள நீரேற்று நிலையங்களின் மூலம், 5,540 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் நாளொன்றுக்கு நபருக்கு 120 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. எதிர்கால மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வழங்கும் பொருட்டு, ஒன்றிய அரசின் அம்ரூத் குடிநீர் திட்டம் இங்கு நடைபெற்று வருகிறது. புதிய திட்டத்தின் மூலம், சுமார் 10,240 குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அம்ரூத் குடிநீர் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கு தொடங்கப்பட்டது.
புதிய திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் ₹17.75 கோடி செலவில், சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதித்து, புதிய இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில், போதிய வேலையாட்களை அமர்த்த வில்லை. மூன்று ஆட்களை வைத்துக்கொண்டு, குழிகளை தோண்டி குழாய்களை பதித்து, வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் திட்டப்பணிகளை விரைவாக நிறைவேற்ற முடியாமல் தாமதம் ஏற்படுகிறது.
பழைய குழாய்களுக்கு பதிலாக, புதிய குழாய்களை பதிக்க மக்கள் நெருக்கம் நிறைந்த சாலைகளை, கண்டபடி தோண்டி பல நாட்கள் மூடாமல் விடுவதால், டூவீலரில் செல்வது கூட சோதனையான பயணமாகியுள்ளது.குழாய் பதித்த பிறகும், அந்த தோண்டிய சாலைகளை சீர்படுத்துவதில்லை. இயந்திரத்தை பயன்படுத்தி மேடு பள்ளமாக மூடி வைப்பதால், இரவு நேரங்களில் நடந்து செல்வதே சிரமமாக உள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ள இந்த திட்ட பணிகள் குறித்து, நகரமன்ற கூட்டத்தில் புகார் சொல்லாத கவுன்சிலர்களே இல்லை. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இந்த பணிகள் மேற்கொள்வதால், மாநில அரசின் அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரர் கட்டுப்படுவதே இல்லை. அம்ரூத் திட்ட பணிகளால், கடந்த 2 வருடங்களாக நகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
சாலைகள் சீரமைக்கப்படவில்லை என பரவலாக மக்கள் மத்தியில் கிளம்பும் புகார்கள் வார்டு கவுன்சிலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஜீவா ஷெட், ஆண்டிகாடு, ஆவாரங்காடு, காந்திபுரம், ஆர்எஸ் ரோடு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு, மருத்துவமனை சாலை, கண்டிப்புதூர் சாலை என சிதிலமடைந்த சாலைகள் அதிமாக உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் சாலைகளை தோண்டி குழாய்களை பதித்து சோதனையோட்டம் நடத்தி, பணிகளை நிறைவு செய்து சாலைகளை மேடுபள்ளம் இல்லாமல் சீராக மூடி வைத்தால், மக்களுக்கு தொல்லையில்லாமல் இருக்கும்.
ஆனால் விருப்பம் போல, பல இடங்களில் தோண்டுவதும், மூடுவதும் பணிகளை முழுமையாக முடிக்காமல் அடுத்த இடத்தில் தோண்டி சாலையை சேதப்படுத்தி விட்டு செல்வதுமாக இருப்பதால், சாலைகள் சீரற்ற நிலையில் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. முப்பது வேலையாட்களை கொண்டு ஒரே மூச்சில் பணிகளை செய்தால், ஒரு மாதத்தில் மொத்த பணிகளையும் செய்துவிடலாம். ஆனால் நாளொன்றுக்கு 2 ஆட்களை கொண்டு பணிகளை செய்வதால், ஒட்டுமொத்த நகர மக்களுக்கும் ஒப்பந்ததாரர் இடையூறை ஏற்படுத்தி வருகிறார்.
அம்ரூத் திட்டப்பணிகள் நிறைவடைந்த பின்னர், சாலை பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி அம்ரூத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட 45 கிலோ மீட்டர் சாலைகளும் மொத்தமாக புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும், குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தபாடில்லை. இதனால் நகர மக்களின் அன்றாட பிரச்னைகளில் சாலை பிரச்னை பிரதானமாகியுள்ளது.
சாலைகளை புதுப்பிக்க அரசு நிதி தயார் அம்ரூத் நிறைவு செய்ய காத்திருப்பு
பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்க வேண்டுமென்ற தொலை நோக்கு திட்டத்தோடு கொண்டுவந்த, ஒன்றிய அரசின் அம்ரூத் திட்டம் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் மக்களுக்கு தொல்லை தரும் திட்டமாக மாறிவிட்டதென நகர்மன்ற தலைவர் செல்வராஜ் கவலை தெரிவித்தார். பிப்ரவரி மாதம் மொத்த திட்டப்பணிகளும் நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நகராட்சி சாலைகள் அனைத்தையும் புதுப்பிக்க போதிய நிதியை, தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். ஆனால் குழாய் பதித்து குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நீண்டு கொண்டே போவதால், ஒட்டு மொத்த சாலை பணிகளும் தாமதமாகி வருகிறது.
அம்ரூத் குழாய் பணியை விரைந்து முடிக்கும்படி, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தி வரும் சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள, தேவையான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொள்ளும். விரைவில் நகராட்சி சாலை அமைக்கும் பணியை தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
The post பள்ளிபாளையம் நகராட்சியில் தோண்டப்பட்ட சாலைகளால் அவதி appeared first on Dinakaran.