பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் கரை பகுதியில் ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இக்கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர். இதனையடுத்து, பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இக்கட்டிடத்தில் வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலை துறை உதவி இயக்குநர், பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை கிடங்கு ஆகிய பிரிவுகளில் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தினமும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையம் சென்று உரங்கள், விதைகள் மற்றும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் மானியம் தொடர்பாக ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு பெறுகின்றனர். இந்நிலையில், பள்ளிப்பட்டிலிருந்து பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் புதிய கட்டிடத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த விரிவாக்க மையத்தில், புதிய கட்டிடம் மற்றும் வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களில் கூடுதல் பொறுப்பில் அலுவலர்கள் பணியாற்றுவதால், விவசாயிகள் அலுவலர்களை எளிதில் சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அலுவலகம் வரும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரந்தரமாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அலுவலக பக்கவாட்டில் அலுவலக பெயர் பலகை இருப்பதால், சாலையில் சென்று வரும் பொதுமக்கள் பலருக்கும் இது எந்த அலுவலகம் என்று தெரியாத நிலை உள்ளது. எனவே, அலுவலக முகப்பு பகுதியில் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக பெயர் பலகை வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
The post பள்ளிப்பட்டு வேளாண் விரிவாக்க மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.