திருப்புவனம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகியை மாணவியின் உறவினர்கள் நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கி, அவரை படம் பிடித்து ‘நான் ஒரு பொம்பள பொறுக்கி’ என படத்துடன் வாட்ஸ் அப்பில் வைரலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாஜ செயலாளராக உள்ளார்.
பாஜ சார்ந்த யூடியூப் சேனல் ஒன்றில், பகுதி நேர நிருபராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ஊரில் டிராவல்ஸ் நடத்தி வரும் ராஜ்குமார், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை வேனில் ஏற்றிச் சென்று டிரிப் அடித்து வந்துள்ளார். இவரது வேனில் பள்ளிக்கு சென்று வந்த 10ம் வகுப்பு மாணவிக்கு, ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.
இதையறிந்த மாணவியின் உறவினர்கள் சிலர், ராஜ்குமாரை மதுரையில் உள்ள தங்களது வீட்டிற்கு நேற்று முன்தினம் வரவழைத்தனர். அங்கு அவரை நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின் ராஜ்குமாரின் செல்போனை பறித்து அவரை போட்டோ எடுத்து, ‘‘நான் ஒரு பொம்பள பொறுக்கி. என்னிடமிருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்’’ என டைப் செய்து ராஜ்குமாரின் செல்போனில் உள்ள அனைத்து மொபைல் நம்பர்களுக்கும் அனுப்பிவிட்டு சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப்பில் இந்த தகவல் வேகமாக பரவியது. அதை பார்த்தவர்களும் பலருக்கு பார்வர்ட் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பூவந்தி போலீசார், திருப்புவனம் வடகரை கிராமத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். ஆனால், வீடு பூட்டி கிடந்துள்ளது. ராஜ்குமாரின் மனைவி, மகன்கள் யாரும் இல்லை, செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப்பில் இருந்தன. இதையடுத்து இவரை தேடும் பணி தீவிரமடைந்தது. நேற்று மாலை ராஜ்குமார், சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.
உடனே மானாமதுரை டிஎஸ்பி தனிப்படை போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரணைக்காக மானாமதுரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
* அடி வாங்குறது புதுசு இல்லை…
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பள்ளி மாணவி ஒருவருக்கு ராஜ்குமார் பாலியல் தொல்லை தந்துள்ளார். அந்த மாணவி பெற்றோரிடம் கூற, அவர்களது உறவினர்கள் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக அடித்துள்ளனர். ஆனால், போலீசாரிடம் புகாரளிக்காமல், அவர்களுக்குள் பேசி பிரச்னையை முடித்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு பாஜ நிர்வாகியை நிர்வாணமாக்கி சரமாரி தாக்குதல்: போக்சோவில் கைது appeared first on Dinakaran.