முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அதிமுகவில் எந்த அதிகாரத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் வழங்கக்கூடாது என வா.புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஜன.13-ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பெங்களூரு வா.புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், ‘ஏற்கெனவே நடந்த ஈரோடு இடைத்தேர்தல் நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இரட்டை இலை சின்னத்தை நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும் பழனிசாமிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளது. இதன்மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, எனது மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இனியும் தேர்தல்ஆணையம் தவறான முடிவை எடுத்தால் மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்’ என அதில் தெரிவித்துள்ளார்.