பவானி: பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து, வானில் கருமேகங்கள் சூழ்ந்ததோடு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதில், பவானி அடுத்த மயிலம்பாடி மற்றும் பருவாச்சி பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோன்று, அம்மாபேட்டை வட்டாரத்தில் முகாசிபுதூர், பட்லூர், காடப்பநல்லூர், ஒலகடம், கேசரிமங்கலம் மற்றும் பூனாச்சி கிராம பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில் அம்மாபேட்டை தோட்டக்கலை துறை அலுவலர் கனிமொழி தலைமையில் உதவி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் விவசாயிகளின் நிலங்களில் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, பவானி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கார்த்திக்குமார் தலைமையில் அதிகாரிகள், வாழை தோட்டங்களில் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.
The post பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் சூறாவளி காற்றால் 10,000 வாழைகள் சேதம் appeared first on Dinakaran.