பவானி: பவானி அருகே நள்ளிரவில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடிசைக்குள் புகுந்து பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சியை சேர்ந்தவர் கருப்பணன் (40). இவரது மனைவி கற்பகவள்ளி (35). பவானி-மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கல்மேடு அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தனர். அங்கேயே சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மேட்டூர் நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மக்காச்சோள கடையில் மோதி, அப்பகுதியில் உள்ள ஓடையை தாண்டி கருப்பணன் வசித்த குடிசைக்குள் புகுந்தது.
இதில், கட்டிலில் படுத்திருந்த கற்பகவள்ளியின் மீது கார் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். குடிசைக்கு வெளியே படுத்திருந்ததால் கருப்பணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீசார் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் காரை அப்புறப்படுத்தி, காருக்கு அடியில் சிக்கி இருந்த கற்பகவள்ளியின் சடலத்தை மீட்டனர். விசாரணையில், திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன், பவானியில் உறவினர் வீட்டுக்கு வந்து, உறவினரின் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post பவானி அருகே நள்ளிரவில் விபத்து: சிறுவன் ஓட்டிச்சென்ற கார் குடிசையில் பாய்ந்து பெண் பலி appeared first on Dinakaran.