புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது என்று பார்ப்போம்.
இந்தியாவின் ஐந்து நடவடிக்கைகளில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தும் உத்தரவு, பாகிஸ்தானுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது எனலாம். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி உதவியுடன் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பல்வேறு போர், வெறுப்புகளைக் கடந்தும் இரு நாடுகளும் தொடர்ந்து அதை மீறாமல் உள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.