ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். விருந்தினர்கள் வெளியேறுவது மனதை வேதனை அடையச் செய்வதாக முதல்வர் உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேதனை: உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஹல்காமில் நேற்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பள்ளத்தாக்கை விட்டு எங்களின் விருந்தினர்கள் வெளியேறுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. ஆனாலும் மக்கள் ஏன் வெளியேற விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். கூடுதல் விமான சேவைகளுக்காக டிஜிசிஏ மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பணியாற்றி வரும் நிலையில், ஸ்ரீநகர் – ஜம்மு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 44 ஒருவழிப் பாதைக்காக திறக்கப்பட்டுள்ளது.