பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் 50 வயதான காஷ்மீர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பிரதிநிதி தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (டிஆர்எப்) தலைவரான ஷேக் சஜ்ஜாத் குல் என்பது தெரிய வந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) ஆதரவின் கீழ், பாகிஸ்தானின் ராவல்பிண்டியின் கண்டோன்மென்ட் நகரில் பதுங்கியிருந்த சஜ்ஜாத் அகமது ஷேக் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் குல், மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் 2020 மற்றும் 2024 க்கு இடையில் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், 2023ல் மத்திய காஷ்மீரில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளார். 2022 ஏப்ரல் மாதம் என்ஐஏ அவரை பயங்கரவாதியாக அறிவித்து, அவரது தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதியை நிர்ணயித்தது. தற்போது பஹல்காம் தாக்குதலையும் ஷேக் சஜ்ஜாத் குல் உத்தரவின் பேரில் தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர்.
ஷேக் சஜ்ஜாத் குல், காஷ்மீரில் உள்ள நகரில் கல்வி பயின்றார். பெங்களூரில் எம்பிஏ படித்தார். பின்னர் கேரளாவில் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பயிற்சி பெற்றார். பின்னர் காஷ்மீர் திரும்பிய அவர் மருத்துவ ஆய்வகத்தைத் திறந்து பயங்கரவாதக் குழுவிற்கு தளவாடங்களை வழங்கினார். 2002 ஆம் ஆண்டு நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் 5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளுடன் பிடிபட்டார். டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த சதி செய்ததாக தெரியவந்தது. இதற்காக 2003 ஆகஸ்ட் 7 அன்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஜம்மு-காஷ்மீரின் உள்நாட்டு பயங்கரவாத இயக்கத்தை தொடங்க 2019 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐ அவரைத் தேர்ந்தெடுத்தது.
The post பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஷேக் சஜ்ஜாத் குல் appeared first on Dinakaran.