கராச்சி: கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. தரையில் இருந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் நடவடிக்கையை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பாகிஸ்தான் போருக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த ஏவுகணை சோதனையை நடத்த முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஒருவேளை ராணுவ நடவடிக்கை எடுத்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
The post பஹல்காம் தாக்குதல் சம்பவம்: கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.