நியூயார்க்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ‘டிஆர்எப் ஐ சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளைப் பிரிவான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ (டிஆர்எப்), இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ என்ற அமைப்பு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு; அந்த அமைப்பினர் சர்வதேச தீவிரவாதிகள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பின் மூலம், டிஆர்எப் அமைப்புடனான அனைத்து விதமான தொடர்புகளும் சட்டவிரோதமாக்கப்பட்டு, அதன் சொத்துக்கள் முடக்கப்படும். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் பாகிஸ்தானை தளமாக கொண்ட டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அறிவித்ததற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பாராட்டுகிறேன். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள வலுவான ஒத்துழைப்பை இது உணர்த்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான டிஆர்எப்- ஐ சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா appeared first on Dinakaran.