ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கடையடைப்பு போராட்டம் இன்று நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும், குறிப்பாக சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன. நகர்முழுவதும் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன.