பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. மூன்று நாள்கள் நீடித்த இந்தத் தாக்குதல், மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக இரு தரப்பும் அறிவித்துவிட்டன. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் – பொது நிர்வாகத் துறை முன்னாள் தலைவர் ராமு மணிவண்ணனோடு நடத்திய நேர்காணலில் இருந்து…
பாகிஸ்தானுடனான இந்தியாவின் மற்ற போர்களில் இருந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ வேறுபட்டது எனச் சொல்லப்படுகிறது. இதை விளக்க முடியுமா? – இதற்கு முன்பும், இந்தியாவில் பொது இடங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பஹல்காமில் மக்களைத் தனிமைப்படுத்தித் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பகுதிக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், உளவியல்ரீதியாக மக்களிடத்தில் ஒரு பீதியை உண்டாக்க இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.