பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, இந்த வார இறுதியில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் நடாளுமன்றத்தில் இம்ரான்கானின் ஆளும் கட்சி, தன் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தவிடாமல் நிராகரித்தது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கும் அழைப்பு விடுத்தது.
இதனால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த எதிர்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய இம்ரான் கான், வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், “நான் எப்போதும் பாகிஸ்தானுக்காக போராடியிருக்கிறேன். கடைசி பந்து வரை போராடப்போகிறேன் என்பதுதான் நாட்டுமக்களுக்கு நான் வழங்கும் செய்தி” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், ரஷ்யா மற்றும் சீனாவுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நட்புறவு காரணமாக, ஆட்சியைக் கவிழ்க்க எதிர்கட்சிகளுடன் இணைந்து அமெரிக்கா சதி செய்துள்ளது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் இம்ரான்கான். ஆனால், அமெரிக்கா இதை மறுத்துவிட்டது.
அதே சமயம், வெளி நாட்டு சதி இருப்பதைக் காரணம் காட்டித்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை முடக்கியதை நியாயப்படுத்தினார் சபாநாயகர் (இம்ரான்கான் ஆதரவாளர்).
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பைத் முடக்கிய இம்ரான் கானின் நடவடிக்கை “அரசியலமைப்புக்கு முரணானது. இதில் எந்தவிதமான சட்டப்பூர்வ விளைவும் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டறிந்தது.
மேலும், “பாராளுமன்றத்தை கலைக்கும் இம்ரானின் முடிவு செல்லாது’ என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக, 90 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தை சனிக்கிழமை (ஏப்ரல் 9) மீண்டும் கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், புதிய தேர்தல் நடத்தப்பட உள்ள ஆகஸ்ட் 2023 வரைக்குமான புதிய பிரதமரை, எதிர்க்கட்சிகள் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.