டாக்கா: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது. 1971ம் ஆண்டு நடந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். வங்கதேசமும் விடுதலை பெற்றது. இந்த போர் நினைவு தினம் இந்தியாவில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. விஜய் திவாசையொட்டி பிரதமர் மோடி போரில் மறைந்த வீரர்களுக்கு தனது எக்ஸ் பதிவில் அஞ்சலி செலுத்தி இருந்தார்.
பிரதமர் மோடியின் பதிவில், ‘‘1971ம் ஆண்டு இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் தியாகங்கள் தலைமுறையினருக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும் மற்றும் இந்திய வரலாற்றில் ஆழமாக பதிந்திருக்கும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பிரதமரின் இந்த விஜய் திவாஸ் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வங்கதேச அரசின் இடைக்கால சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தனது பேஸ்புக் பதிவில், பிரதமர் மோடி பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை இணைத்து,‘‘நான் கடுமையாக எதிர்க்கிறேன். 1971ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வங்கதேசத்தின் வெற்றிநாள். இந்த வெற்றியில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்தது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். நஸ்ருல் மட்டுமின்றி இடைக்கால அரசில் உள்ள பல அதிகாரிகளும் இதே உணர்வை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லாவும் மோடியின் பதிவை விமர்சித்துள்ளார். இது வங்கதேசத்தின் விடுதலைப்போர். இது பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கானது. ஆனால் இது இந்தியாவின் போர் மற்றும் அவர்களின் சாதனை என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவரது கதைகளில் வங்கதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
The post ‘பாக்.போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்’ பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் appeared first on Dinakaran.