இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று (மார்ச் 11) காலை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது பலுச் விடுதலை படையை சேர்ந்தவர்கள், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 400-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.