இபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு தமிழக அரசியலை மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா சொல்லி இருப்பது அவரது விருப்பம்” என்று நழுவியிருக்கிறார் இபிஎஸ்.

அப்படியானால் பாஜக-வுடன் கூட்டணி இல்லையா என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். இதற்கு பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், “அமித் ஷாவிடம் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக மக்கள் யாரும் சொல்லவில்லை. திமுக-வினரும் பாஜக-வினரும் அவர்களின் ஆதரவு சமூக வலைதளங்களும் தான் பரப்பி வருகிறார்கள். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. நதிநீர் பங்கீட்டை தீர்ப்பதில்லை. ஓரவஞ்சனை தான் செய்கின்றனர்.