புதுடெல்லி: மக்களவையில் நடந்த வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த காரசாரமான விவாதத்துக்கு இடையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே பாஜக தலைமை குறித்து ஒரு கலாய்ப்புச் சண்டை நடந்தது.
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு சட்டத் திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர், திடீரென விவாதத்தில் இருந்து விலகி, பாஜகவின் அடுத்த தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பேசும்போது, "உலகின் மிகப் பெரிய கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் கட்சியால் இன்னும் அவர்களின் அடுத்த தேசியத் தலைவரைக் கூடத் தேர்வு செய்ய முடியவில்லை" என்று புன்னைகை முகத்துடன் காலாக்கும் தொனியுடன் கூறினார்.