சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலையும், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்க்காவையும் மையப்படுத்தி மிகவும் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்னிறுத்தி ‘முருகன் மலையை காக்க திருப்பரங்குன்றத்திற்கு வருக’ என்று தனது அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களின் இறை நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிற பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்டு அதன் அமைப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த அமைப்புகளின் பொய்ப்பிரசாரத்தை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் இவர்களின் அழைப்பை முற்றிலுமாக புறக்கணித்து சரியான பாடம் புகட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற மதவெறி சக்திகள் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த அனைத்து பகுதி மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வரும் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
The post பாஜவின் பொய் பிரசாரத்தை மக்கள் புறந்தள்ளி பாடம் புகட்டிவிட்டனர்: மார்க்சிஸ்ட் கம்யூ. பாராட்டு appeared first on Dinakaran.