நெல்லை: நெல்லை அருேக பாஜ நிர்வாகியின் கார் அதிவேகமாக சென்று பைக் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் பா.ஜ நெல்லை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு புதிய சொகுசு காரை வாங்கினார். இந்த சொகுசு காரை நேற்று மாலையில் அதே பகுதியை சேர்ந்த டிரைவரான பாலகுமார் என்பவர் அஞ்சு கிராமத்தில் இருந்து வள்ளியூர் நோக்கி அதிவேகத்தில் ஓட்டிச்சென்றார். அப்போது கூலி தொழிலாளிகளான கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜன்(38), வினோத்(27) ஆகிய 2 பேர் வேலையை முடித்துவிட்டு நான்குவழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பணகுடி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே அதிவேகத்தில் வந்த பா.ஜ நிர்வாகியின் கார் பைக்கின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நாகராஜன், வினோத் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் கீழே விழுந்தனர். 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ நிர்வாகியின் கார் டிரைவரான பாலகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாஜ நிர்வாகி கார் மோதி 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.