*மடத்துக்குளத்தில் வீணாகும் நெல் மூட்டைகள்
உடுமலை : பாப்பான்குளத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு, விவசாயிகள் நெல்லை அளித்து வருகின்றனர். அதேநேரம் மடத்துக்குளத்தில் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் நெல் வீணாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.உடுமலையில் அமராவதி பாசன பகுதியில் விவசாயிகள் அதிகளவில் நெல், கரும்பு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
குமரலிங்கம் கிளை வாய்க்கால் பகுதியில் மட்டும் சுமார் 1300 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது, நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி அரசு நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பாப்பான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் அங்கு நெல் மூட்டைகளை கொண்டு வந்து அளித்து வருகின்றனர்.பாப்பான்குளம் கொள்முதல் மையத்தில் பாப்பான்குளம் மற்றும் குமரலிங்கம் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 640 ஏக்கர் நிலங்களில் விளையும் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக 78 விவசாயிகள் பதிவு செய்தனர்.
இதுகுறித்து கொள்முதல் மைய அதிகாரிகள் கூறுகையில், “கொள்முதல் மையத்தில் மொத்தம் 38,500 மூட்டை நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 15 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2450க்கும், பொது ரகம் ரூ.2405க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. 52 விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது” என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், “பாப்பான்குளத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாங்கள் கோனிப்பையில் நெல் கொண்டு வருகிறோம்.
திடீரென பெய்யும் கோடை மழையால் நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி நனையும் நிலை உள்ளது. எனவே, நாங்கள் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகளை கொண்டு வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மடத்துக்குளத்தில் உள்ள கொள்முதல் மையத்தில் சரிவர பணப்பட்டுவாடா செய்யப்படுவதில்லை. ஆனால் இங்கு உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படுகிறது” என்றனர்.
மடத்துக்குளம் விவசாயிகள் வேதனை: மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணை நீரை அடிப்படையாக்கக் கொண்டு பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது குமரலிங்கம், வேடப்பட்டி, மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர், கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிச்சந்தையில் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ஆனால், உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாததால் திறந்த வெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி என உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், விற்பனை விலை பெரிய அளவில் மாற்றமில்லாமல் தொடர்கிறது. வெளிச்சந்தையில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைப்பதை தடுக்கும் வகையில், ஆண்டு தோறும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுகிறது.
ஆனால், நெல் கொள்முதல் மையத்தில் போதிய இடவசதி இல்லை. அதிகபட்சமாக 1000 மூட்டைகள் வரை மட்டுமே அங்கு இருப்பு வைக்க முடியும். விவசாயிகளிடமிருந்து தினசரி 800 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லை உடனடியாக எடுத்துச் சென்றால் மட்டுமே அடுத்த நாள் கொள்முதல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் சில நாட்களில் நெல் எடுக்க வாகனங்கள் வராத நிலையில் கொள்முதலை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட பல நூறு நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மடத்துக்குளம் பகுதியில் தற்போது கடும் வெயில் அடித்தாலும் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. நெல்மூட்டைகளை மூடி வைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தார்ப்பாய்கள் கிழிந்து காணப்படுகின்றன.
இதனால் கனமழை பெய்தால் நெல் முழுவதும் நனைந்து விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும்.எனவே, சீரான முறையில் கொள்முதல் செய்து, உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
The post பாப்பான்குளத்தில் நெல் கொள்முதல் தீவிரம் appeared first on Dinakaran.