பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் கட்சியை வழிநடுத்துவது யார் என்ற அதிகார மோதல் போக்கால் யார் பின்னால் செல்வது என தெரியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த போதே, தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் தொடங்கிவிட்டது. கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணியை கவுரவ தலைவராக நியமித்த ராமதாஸ், அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பை கருத்தில் கொண்டு, அவரது மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு கட்சியில் இளைஞர் அணி பொறுப்பை வழங்கினார். கட்சியில் எவ்வித பங்களிப்பையும் வழங்காத தமிழ்க்குமரனுக்கு கட்சியில் எப்படி பொறுப்பை வழங்கலாம் எனவும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் தான் வகித்த பொறுப்பை வழங்கலாம் என்றும் ராமதாஸிடம் அன்புமணி கோபமடைந்து எதிர்ப்பு தெரிவித்தார். சில மாதங்களில் இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் தமிழ்க்குமரன். இதனால், ராமதாஸும், ஜி.கே.மணியும் வருத்தமடைந்தனர். தொடர்ந்து கலந்தாலோசிக்காமல், தேர்தல் கூட்டணி போன்ற முடிவுகளை தன்னிச்சையாக அன்புமணி எடுத்தது ராமதாஸுக்கு கோபத்தை அதிகரித்தது.