சென்னை: பாமக, விசிக போல் கூட்டணியில் கொள்கை சமரசம் செய்ய வேண்டும் என்பதால், தோற்றாலும் பரவாயில்லை என கூட்டணியின்றி தனித்தே போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வேலுநாச்சியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர், ''நம்மாழ்வாரின் கனவு என்பது அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வில்லாத தேர்ச்சி. 8-ம் வகுப்பு முடிக்கும் முன்பே மாணவர்கள் பின் தங்கிவிட்டால், அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிடும். கல்வி என்பது சுகமானதாக இருக்க வேண்டும். சுமையாக இருக்கக்கூடாது. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்கள் உலக சாதனைகளை படைத்திருக்கின்றனர். அவர்கள் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன? அறிவை வளர்க்கும் ஒரு கருவி தான் கல்வியே தவிர மனித அறிவுக்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமில்லை.