திருச்சி: மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று மாலை சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். இதில் இந்தியா முழுவதுமிருந்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு ‘ஜாம்புரி’ என்ற பெயரில் இன்று(28ம் தேதி) மாலை துவங்கியது.
விழா பிப்ரவரி 3ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணர் இயக்கத்தை சேர்ந்த 25,000 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் பங்கேற்கின்றனர்.இதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் நேற்று முதல் சிப்காட் வளாகத்துக்கு சாரண மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வடமாநில சாரண சாரணியர் கடந்த 2 நாட்களாக குவிந்து வருவதால் சிப்காட் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சிப்காட் வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக கூடாரங்கள். கழிவறை மற்றும் குளியலறை, கருத்தரங்குகள் நடத்துவதற்கான கூட்டரங்கு, உணவு தயாரிப்பு கூடங்கள், அமர்ந்து சாப்பிடுவதற்கான அறைகள், மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாரண மாணவர்கள் 7 நாட்கள் தங்கியிருந்து தங்களது கலை உணர்வுகள், விளையாட்டு, அறிவுத்திறன்களை வெளிப்படுத்துகின்றனர். மேலும் அவர்களது திறமையை சோதிக்கும் வகையில் தனித்திறன், குழுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டின் கருப்பொருளாக ‘அதிகாரம் பெற்ற இளைஞர்கள், வளர்ந்த இந்தியா’ என பெயரிடப்பட்டு உள்ளது. சிப்காட் வளாகத்தில் மாநாட்டின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாநாட்டை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக உலக அளவில் சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவலின் வழித்தோன்றல்களில் ஒருவரான டேவிட் பேடன் பவல் ஆஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்றார். தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், சிவசங்கர் பங்கேற்னறனர்.
The post பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.